இந்தியாவில் Gen Z போராட்டங்கள் மீதான அடக்குமுறை: அரச வன்முறையின் கவலையளிக்கும் போக்கு
எட்கர் கைசர், REDRESS அமைப்பின் வருகை தரும் வழக்கறிஞர்
2026 ஜூலை 20 அன்று, கல்வி முறையில் சீர்திருத்தங்களைக் கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தலைநகர் டெல்லியிலும் மேலும் பல மாநிலங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டபோது, இந்தியா ஒரு முக்கியமான அரசியல் தருணத்தைச் சந்தித்தது. அரசியல் முக்கியத்துவத்திற்கு அப்பால், இந்தப் போராட்டங்கள் நாட்டில் நிலவும் குடிமைச் சுதந்திரங்களின் நிலைமையை வெளிப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்தன. கண்ணீர்ப்புகைக் குண்டுகள், பெல்லட் துப்பாக்கிகள், ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகள், கற்கள் ஏற்றப்பட்ட லாரிகள், மேலும் துப்பாக்கிகள் கூட பயன்படுத்தப்பட்ட நிலையில், டெல்லி மற்றும் பல மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களுக்கு அரசாங்கம் வன்முறையான பதிலளிப்பை மேற்கொண்டது. ஆனால் இவை எதுவும் புதிதல்ல. REDRESS வெளியிட்ட Torture Normalised: State Violence in India என்ற அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள போக்கையே இது கிட்டத்தட்ட முழுமையாகப் பின்பற்றுகிறது.
பரிச்சயமான ஒரு போக்கு:
இந்தியாவில் அமைதியான முறையில் ஒன்றுகூடும் உரிமைக்கு எதிரான அடக்குமுறையின் போக்கை REDRESS-இன் அறிக்கை வெளிப்படுத்தியது. இதில், அளவுக்கு மீறிய பலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சித்திரவதை அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான முறையில் நடத்துதல் இடம்பெறுகிறது. குறிப்பாக, கண்மூடித்தனமாகப் பயன்படுத்தப்படும் ‘குறைந்த உயிர்க்கொல்லித் தன்மை கொண்ட ஆயுதங்கள்’ என அழைக்கப்படுபவையும் இதில் அடங்கும். அரசாங்கத்தைச் சவால் செய்யும் எவருக்கும் எதிராக, குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி, சட்டங்களை ஆயுதமாக்குவதன் மூலம் இந்திய அரசு எவ்வாறு எதிர்ப்புக் குரல்களை குற்றமாக்கி வருகிறது என்பதையும் இந்த அறிக்கை அடையாளம் காட்டியது. இந்த மீறல்களுக்கு எதிரான பொறுப்புக்கூறலைத் தடுக்கும் தண்டனையின்மை கலாச்சாரத்தையும், அமைப்புசார் தடைகளையும் அறிக்கை வெளிப்படுத்தியது.
அமைதியான போராட்டத்திற்கு எதிரான கொடூரமான பலப்பிரயோகம்
இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள இளைஞர்கள் 2026 ஜூன் 6 அன்று தெருக்களில் இறங்கினர். இந்திய தலைமை நீதிபதி நாட்டின் இளைஞர்களை கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுக் கூறிய கருத்துக்கு எதிர்வினையாக உருவாக்கப்பட்ட Cockroach Janta Party என்ற அரசியல் நையாண்டிப் பக்கத்திற்கு இணையத்தில் கிடைத்த பெரும் ஆதரவைத் தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.
புத்தகங்கள், மலர்கள் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்திய உண்மையான அமைதியான போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்தது. எனினும், போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்லப்போவதாக அறிவித்த 2026 ஜூலை 20 அன்று, அதிகாரிகள் பெல்லட் துப்பாக்கிகளையும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தி அவர்களை எதிர்கொண்டனர்.
வன்முறை வெடிப்பதற்கு முன்பே, அமைதியாக ஒன்றுகூடும் போராட்டக்காரர்களின் உரிமையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் சில சட்டங்களைப் பயன்படுத்தினர்.
ஜூலை 19 மாலை, அறிவிக்கப்பட்ட பேரணிக்கு முந்தைய இரவில், டெல்லி காவல்துறை தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பித்து, போராட்டக்காரர்கள் பேரணியாகச் செல்வதைத் தடுத்தது. இத்தகைய உத்தரவு தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்றும், தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகளைத் தடுக்க முடியும் என்ற “சாத்தியம்” அல்லது “பொது அமைதிக்கு இடையூறு” ஏற்படும் என்பதற்கான உறுதியான உண்மைகள் இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே அது பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தது. பெரும்பாலும் அமைதியாக நடைபெற்ற 40 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு இந்த உத்தரவு பயன்படுத்தப்பட்டிருப்பது தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும்.
ஜூலை 20 அன்று, அமர்ந்திருந்த போராட்டக்காரர்கள் கூட்டத்தின் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன; ஆயுதமற்ற மாணவர்களுக்கு எதிராக ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகள் பயன்படுத்தப்பட்டன; சிறார்கள் தன்னிச்சையாகக் காவலில் வைக்கப்பட்டனர்; இணைய சேவை துண்டிக்கப்பட்டது; கற்கள் ஏற்றப்பட்ட லாரிகள் காவல்துறையால் போராட்ட இடத்தில் நிறுத்தப்பட்டன; பின்னர் குறைந்தது 10 போராட்டக்காரர்கள் பெல்லட் காயங்களுக்கு உள்ளாகியிருந்தது தெரியவந்தது.
இந்த நடவடிக்கைகள் போராட்டங்களின்போது அரசுnசட்டபூர்வமாக பலத்தைப் பயன்படுத்துவது குறித்த தீவிரமான கவலைகளை எழுப்புகின்றன. அதிகாரிகள் போராட்டங்களை முறையாகக் கையாள வேண்டும்; மோதல்கள் ஏற்படும் பட்சத்தில் பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; மேலும், கடைசி முயற்சியாக மட்டுமே, அவசியம் மற்றும் விகிதாசாரத்திற்கு உட்பட்டு கடுமையான நிபந்தனைகளுடன் பலத்தைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, கூட்டத்தைக் கலைப்பதற்காக மட்டும் பலத்தைப் பயன்படுத்தவோ, கண்மூடித்தனமாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குறைந்த உயிர்க்கொல்லித் தன்மை கொண்ட ஆயுதங்களைப் பயன்படுத்தவோ கூடாது.
பெல்லட் துப்பாக்கிகளின் பயன்பாடு குறிப்பாக கவலைக்குரியது. காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படைகளால் அவை பயன்படுத்தப்பட்டு வந்தாலும், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அவற்றின் பயன்பாட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளன. தேசியத் தலைநகரில் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மேலும், குறைந்தது 500 அடி தூரத்தைப் பராமரிக்க வேண்டும் என்ற விதி உள்ளிட்ட உள்நாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படாமல் அவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கவலையும் உள்ளது. மிக அருகிலிருந்து பெல்லட் துப்பாக்கிகளைச் சுடுவது உடலின் உள் உறுப்புகளைத் துளைக்கும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்த அடக்குமுறையைத் தொடர்ந்து, பல போராட்டக்காரர்கள் கடுமையான பெல்லட் காயங்களுக்கு உள்ளாகினர். அவர்களில் ஒரு இளம் போராட்டக்காரர் தனது பார்வையை இழந்தார். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர்; பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது; மேலும் கற்கள் ஏற்றப்பட்ட லாரி காவல்துறையினராலேயே அங்கு நிறுத்தப்பட்டதாக பின்னர் செய்திகள் தெரிவிக்கின்றன.
மற்றொரு இந்திய மாநிலமான பீகாரில், போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக காவல்துறையினர் தாக்குதல் துப்பாக்கியைப் (Assault rifle) பயன்படுத்தும் அளவுக்குச் சென்றனர். இத்தகைய நடைமுறை உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டம் இரண்டையும் மீறுகிறது.
இந்தியாவில் போராட்டங்களின்போது அளவுக்கு மீறிய பலத்தைப் பயன்படுத்தியதாக சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்கள், சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கையின் கீழான கடமைகள் உள்ளிட்ட சர்வதேச சட்டங்கள் மற்றும் தரநிலைகள் மீறப்படுவது குறித்த தீவிரமான கவலைகளை எழுப்புகின்றன. இதில் 1977ஆம் ஆண்டின் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கான ஐ.நா. நடத்தை விதிமுறைகள், 1990ஆம் ஆண்டின் பலத்தையும் துப்பாக்கிகளையும் பயன்படுத்துவது குறித்த ஐ.நா. அடிப்படைக் கொள்கைகள், மற்றும் 2020ஆம் ஆண்டின் குறைந்த உயிர்க்கொல்லித் தன்மை கொண்ட ஆயுதங்கள் குறித்த ஐ.நா. வழிகாட்டுதல்கள் ஆகியவையும் அடங்கும்.
காணாமல் போன பொறுப்புக் கூறல்:
இந்தப் போக்கு தொடர்ந்து நீடிப்பதற்கும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதற்கும் காரணம் வன்முறை மட்டுமல்ல; அதற்குக் காரணமானவர்களுக்கு வெளிப்படையாக எந்த விளைவுகளும் ஏற்படாதிருப்பதுமாகும். வன்முறையைக் காட்டும் காணொளிகள் உச்சநீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டபோது, நீதிமன்றம் “காணொளிகளைப் பார்க்க எங்களுக்கு நேரமில்லை” என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. அளவுக்கு மீறிய பலப்பிரயோகத்தை ஆய்வு செய்யுமாறு கோரப்பட்டபோது, டெல்லி உயர்நீதிமன்றமும் வழக்கறிஞர்களிடம் “இதையெல்லாம் நீதிமன்றத்திற்குள் இழுக்க வேண்டாம்” என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கும், அவை முறையாக விசாரிக்கப்படுவதையும், குற்றவாளிகள் பொறுப்புக்கூறச் செய்யப்படுவதையும், பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு மற்றும் பிற நிவாரணங்களைப் பெறுவதையும் உறுதி செய்வதற்கு பொறுப்புக்கூறல் அத்தியாவசியமானது. எனினும், இந்தியாவில் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அமைப்புசார் பலவீனங்களை எதிர்கொள்கின்றன.
மனித உரிமை மீறல்களைத் தீர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC), பெருமளவிலான நிலுவை வழக்குகள், வரையறுக்கப்பட்ட அமலாக்க அதிகாரங்கள் மற்றும் அதன் நிறுவனத் திறன் குறித்த Global Alliance of National Human Rights Institutions (GANHRI)-ன் கவலைகள் ஆகியவற்றுடன் போராடி வருகிறது. REDRESS தனது அறிக்கையில் NHRC-இன் சுயாதீனத்தன்மை மற்றும் மனித உரிமை மீறல்களைத் திறம்பட விசாரிக்கும் அதன் திறன் குறித்து கவலைகளை எழுப்பியது. இது GANHRI மற்றும் இந்திய உச்சநீதிமன்றம் ஏற்கனவே வெளிப்படுத்திய கவலைகளையும் பிரதிபலிக்கிறது. இந்தக் குறைபாடுகள் கண்காணிப்பை பலவீனப்படுத்துவதுடன், அரச வன்முறை தொடர்ந்து இடம்பெற்று இயல்பான ஒன்றாக மாறும் தண்டனையின்மைச் சூழலுக்கும் பங்களிக்கின்றன.
இருப்பினும், இந்த வழக்கில், Gen Z போராட்டங்களை அடக்கியபோது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட கொடூரச் செயல்களை NHRC கவனத்தில் எடுத்துள்ளது. மேலும், தடையுத்தரவைப் பிறப்பித்ததற்கான காரணத்தையும், பலப்பிரயோகம் விகிதாசாரமானதாக இருந்ததா என்பதையும் விளக்கும் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதே காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளிடம், அவர்களுடைய சொந்த சக ஊழியர்களையே விசாரிக்கச் சொல்வது, விசாரணையின் சுயாதீனத்தன்மையைப் பாதிக்கிறது.
உச்சநீதிமன்றமும் இந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டு, போராட்டத்தின்போது காவல்துறையினரின் நடவடிக்கைகளை விசாரிக்க சுயாதீனக் குழுவொன்றை அமைத்துள்ளது. எனவே, இதில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளும் அவர்களின் மேலதிகாரிகளும் பொறுப்புக்கூறச் செய்யப்படுகிறார்களா என்பது உறுதி செய்யப்பட வேண்டும். பீகாரில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல்துறை பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள போதிலும், அனைத்து குற்றவாளிகளும் பொறுப்புக்கூறச் செய்யப்படுவதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ள இழப்பீடு மற்றும் நிவாரணங்கள் வழங்கப்படுவதையும் உறுதி செய்வதே நீதிக்கான அடிப்படைத் தேவையாகும்.
Torture Normalised அறிக்கை, இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் பின்வருவனவற்றை வலியுறுத்தியது:
- போராட்டங்களின்போது பலத்தைப் பயன்படுத்துவது தொடர்பான சர்வதேச மனித உரிமைச் சட்டங்களையும் தரநிலைகளையும் உள்நாட்டுச் சட்டம் மற்றும் நடைமுறைகளில் முழுமையாக இணைக்க வேண்டும். இதில் பலத்தைப் பயன்படுத்துவதற்கான அவசியம் மற்றும் விகிதாசாரம் குறித்த தெளிவான தேவைகளும், உயிர்க்கொல்லியான பலத்தைப் பயன்படுத்துவதற்கான கடுமையான வரம்புகளும் இருக்க வேண்டும்.
- மனித உரிமை மீறல்களில் குற்றஞ்சாட்டப்படும் அரச அதிகாரிகளுக்கு விலக்கு வழங்கும் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
- தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) பரிந்துரைகள் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவையாக இருப்பதை உறுதி செய்வதுடன், அதன் சுயாதீனத்தன்மையையும் பாரபட்சமற்ற தன்மையையும் உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நடைமுறையில் அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்கு இவை முக்கியமான பரிந்துரைகளாகும். அமைதியான போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் சட்டவிரோதமான மற்றும் விகிதாசாரமற்ற பலத்தைத் தொடர்ந்து பயன்படுத்தும் போக்கும், அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டனையின்றித் தப்பிப்பதும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். பொதுமக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும். உலகின் மிகப்பெரிய ஜனநாயகம், அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒன்றான போராட்டம் நடத்தும் உரிமையை, கட்டுப்படுத்தப்பட வேண்டிய அச்சுறுத்தலாக அல்லாமல், பாதுகாக்கப்பட வேண்டிய உரிமையாகக் கருத வேண்டும்.
Photo by: Sumita Roy Dutta CC 2.0